தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி கொடுமையைத் தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கந்துவட்டி தொல்லையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கந்துவட்டி கொடுமையை தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற நடவடிக்கையை மேற்கொள்ள சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும் என ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவர் ஆணையிட்டுள்ளார்.

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடம் பெற்ற கடன் தர உறுதியளித்த  ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், கையொப்பமிடப்பட்ட காசோலைகள் உள்ளிட்டவற்றை சட்ட ரீதியான ஆலோசனைக்கு பிறகு பறிமுதல் செய்யவும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

 

கடலூரில் காவலராக இருந்த செல்வகுமார், கடந்த 2020இல் ரூ.5 லட்சம் கந்து வட்டி பெற்றார். எதுவும் வெற்று பத்திரத்தில் அவர் கையொப்பமிட்டு அந்தப் பணத்தை பெற்றார். அவர் ரூ.3 லட்சத்தை வங்கி மூலமாகவும், ரூ.2 லட்சத்தை ரொக்கமாகவும் திருப்பி அளித்து விட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், வெற்று பத்திரத்தில் அவர் ரூ.12 லட்சம் கடன் பெற்றதாகவும் மேலும் ரூ.6 லட்சத்தை அளிக்குமாறும் கந்து வட்டி கொடுத்தவர் வற்புறுத்தியிருக்கிறார். இதையடுத்து, கந்துவட்டி கொடுத்தவர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அதை விசாரித்த போலீஸார், காவலர் செல்வகுமாரை கூடிய விரைவில் பாக்கிப் பணத்தை திருப்பி அளிக்குமாறும் இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். கந்து வட்டி கொடுத்தவரிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டதை அடுத்து, அவர் தற்கொலை செய்திருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கந்துவட்டி கொடுத்தவரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.