கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய, ஈரோடு, பெருந்துறை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் ஸ்கேன் சென்டர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், விசாரணை அறிக்கையை அரசிடம் அளித்தனர்.

அதன்பேரில் ஈரோடு, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக, ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர்கள் நேற்று மூடப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பணியை மேற்கொண்டனர்.

உள்நோயாளிகளை 15 நாட்களில் வெளியேற்றி விட்டு, இந்த மருத்துவமனைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், புதிய உள்நோயாளிகளைச் சேர்க்கக் கூடாது எனவும் இந்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், சேலம் பிருந்தாவன் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைக்கு, சேலம் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான சுகாதாரத்துறை குழுவினர் நேரில் சென்று, சிறுமியிடம் சட்ட விரோதமாக கரு முட்டை எடுக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர்.

மேலும், அரசு உத்தரவின்படி, அந்த மருத்துவமனையில் புதிதாக நோயாளிகளை சிகிச்சைக்கு சேர்க்கக் கூடாது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை 15 நாட்களுக்குள் வேறு மருத்துவமனைக்கு மாற்றிவிட வேண்டும். 15 நாளில் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அத்துடன், அந்த மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையில் சுகாதாரத்துறை குழுவினர் ‘சீல்’ வைத்தனர்.