தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து, நெல் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு சமீபத்தில் வெளியிட்டதாகவும், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில், வேளாண்மை நேர்முக உதவியாளர், வேளாண்மை இணை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், விவசாயிகள் சார்பால இரு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த குழு தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்கவும், விவசாயிகளின் குறைகளை அவ்வப்போது தீர்க்கவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.