ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, சிறுபான்மையினர் ஆதரவு அளிப்பதாக, தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்திலுள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார். நாடு மதம் சார்ந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரது பேச்சு அரசியல் சாசன அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் மனு அளிக்கும் முடிவை சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறது.
தமிழக அரசின் செயல்பாடுகளையும், நிர்வாகத்தையும் நிலைகுலைய வைக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்போல் ஆளுநர் பேசிவருவது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும். உலக அளவிலான பெரிய முதலீடுகளை எல்லாம் குஜராத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தேசிய சராசரி ஜிஎஸ்டியைவிட 12 சதவீதம் குறைவாகவே அந்த மாநிலம் அளிக்கிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் தேசிய சராசரியைவிட அதிகமாக ஜிஎஸ்டி செலுத்துகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் தமிழகத்தை புறக்கணிப்பதை ஏற்க முடியாது. கோவை சம்பவத்தில் தமிழக போலீஸார் துரிதமாக விசாரித்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறையை அண்ணாமலை குற்றஞ்சாட்டுவது அரசியல் ஆதாயத்துக்காக செய்வதாகும். இதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயல்கிறது. ஆனால் தமிழகம் அதை அனுமதிக்காது. இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.