இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளது.
இத்தேர்வை ஒட்டிய நாட்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வும் நடப்பதால், ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “கரோனா பாதிப்புக்கு இடையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் அட்டவணை சீராக இருக்க வேண்டும். எனவே தேர்வை தள்ளி வைக்க முடியாது” என தேசிய தேர்வு முகமை மற்றும் கல்வி அமைச்சகம் சார்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் மம்தா சர்மா வாதாடினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “நீட் தேர்வு அட்டவணை ஏப்ரலில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் சிலரின் கோரிக்கைக்காக தேர்வை தள்ளி வைக்க வேண்டுமா?’’ என்று கூறி ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தனர்.