மதுரை மாநகராட்சியின் 100 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களது உறுதிமொழியில் பல்வேறு சுவாரசிய கோஷங்களை கூறி பதவியேற்றுக் கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு புதிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணியில் திமுக தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளையும், காங்கிரஸ் 5 வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளையும், மதிமுக 3 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் ஒரு வார்டையும் கைப்பற்றினர். அதிமுக 15 வார்டுகளையும், பாஜக ஒரு வார்டையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 80 கவுன்சிலர்களை மதுரை மாநகராட்சியில் பெற்றிருப்பதால் அக்கட்சி மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், திமுக இன்னும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவிக்காததால், அப்பதவிகளை கைப்பற்ற திமுகவின் முக்கிய கவுன்சிலர்கள் மல்லுக்கட்டுகின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் யாரைத் தேர்வு செய்கிறாரோ என்ற பதற்றத்தில் மேயர், துணை மேயர் பதவிகளை எதிர்பார்க்கும் கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பிரமாண்ட பந்தலில் பதவியேற்பு விழா: இந்த பரபரப்பான சூழலில் இன்று மதுரை மாநகராட்சி புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மாநகராட்சி வளாகத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பதை டிஜிட்டல் திரையில் பார்க்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினருக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒருவர் பின் ஒருவராக கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதில் பல கவுன்சில்களுக்கு தமிழில் இருந்த உறுதிமொழி படிவத்தை படிக்கத் தெரியவில்லை. அதனால், மாநகராட்சி ஆணையர் சொல்லச் சொல்ல, கவுன்சிலர் அதை திரும்பச் சொல்லி பதவியேற்றுக் கொண்டனர்.
’தளபதி நல்லாசியுடன்’ – கவுன்சிலர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு புதிய கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொண்டனர். 47-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பானு முபாரக், மு,க.அழகரி ஆதரவாளர். இவரது கணவர் முபாரக் மந்திரி மு.க.அழகிரியின் நிழலாக இருந்தவர். பதவியேற்பு விழாவின்போது பானு முபாரக், ”தலைவர் கலைஞரின் நல்லாசியுடன் குடும்பத் தலைவர் அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரியின் நல்லாசியுடனும், தமிழக முதல்வர் தளபதியின் நல்லாசியுடனும் மதுரை மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்கிறேன்” என்றார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 64-வது வார்டு உறுப்பினர் சோலை. ராஜா பதவியேற்பின்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயரை தவிர்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரை மட்டும் பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பாரத் மாதா கி ஜே கோஷம்: இதேபோன்று பதவியேற்பின்போது திமுக கவுன்சிலர்கள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயரை பயன்படுத்தி பொறுப்பேற்றுக் கொள்வதிலே ஆர்வம் காட்டினர். சிலர், உள்ளூர் அமைச்சர்கள் பெயரை கூறியும் பதவியேற்றுக் கொண்டனர். 4 திமுக கவுன்சிலர்கள் பெரியார் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சில கவுன்சிலர்கள் அண்ணா, கலைஞர் பெயரையும் சேர்த்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அக்கட்சி கவுன்சிலர் ஒருவர் பதவியேற்பின்போது பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாஜக கவுன்சிலர் பூமா ஜனாஸ்ரீ முருகன் பதவியேற்று முடித்ததும் மைக்கில் ”பாரத் மாதா கி ஜே” என ஓங்கி முழக்கமிட்டுச் சென்றார்.