டோக்கியோ: குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று என்இசி தலைவர் நோபுஹிரோ எண்டோவை சந்தித்துப் பேசினார்.

அரசு முறைப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ எண்டோவை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில், முக்கியமாக சென்னை – அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிடையேயும், கேரளாவின் கொச்சி – லட்சத்தீவுகளிடையேயும் அமைக்கப்பட்டு வரும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பணியில் என்இசி கார்ப்பரேஷன் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து என்இசி கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மோடி அழைப்பு: இதனிடையே, டோக்கியோவில் ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தாய் நிறுவனமான ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான தடாஷி யனாயை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜவுளி மற்றும் ஆடைச்சந்தை குறித்தும், இந்தியாவில் உள்ள ஜவுளி உற்பத்தி திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் எளிதாக வணிகம் செய்யும் விதமாக, தொழில்துறை மேம்பாடுகள், உள்கட்டமைப்பு வசதி, வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர்கள் துறை உள்ளிட்டவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்பாக மோடி அப்போது எடுத்துரைத்தார். ஜவுளி உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியாவின், பிரதம மந்திரி – மித்ரா திட்டத்தில் பங்கேற்குமாறு யுனிக்லோ நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து பேசுகிறார்.

டோக்கியோ செல்லும் முன்பு பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில், ‘குவாட் அமைப்பின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை, இந்த உச்சி மாநாடு வழங்கும். இந்தோ-பசிபிக் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய விஷயங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசிப்போம்.

ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது, அமெரிக்காவுடனான உறவு களை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்போம். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். அப்போது, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பன்முக ஒத்துழைப்பு, பாதுகாப்பில் கூட்டுறவு, இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.

எனது டோக்கியோ பயணத்தின்போது, இந்தியா – ஜப்பான் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேலும் தொடர்வதை எதிர்நோக்கியுள்ளேன். இரு நாடுகள் இடையேயான கூட்டுறவில், பொருளாதார ஒத்துழைப்பு முக்கியமான அம்சமாகும்.

கடந்த மார்ச் மாதம் இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நடந்தது. அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ஜப்பானின் முதலீடு 5 டிரில்லியன் ஜப்பான் யென் அளவுக்கு இருக்க வேண்டும் என்று நானும், ஜப்பான் பிரதமர் கிஷிடாவும் அறிவித்தோம். இரு நாடுகள் இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுவேன். ஜப்பானில், 40 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இரு நாடுகள் இடையேயான உறவில், இவர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர். அவர்களையும் சந்தித்து பேச உள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார்.