2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் மகாராஷ்டிரா முதல்வரும் பால் தாக்கரேவின் விசுவாசியுமாக அறியப்படும் ஏக்நாத் ஷிண்டேவைப் பற்றிய விரைவுப் பார்வை இது.

மகாராஷ்டிரா என்றால் முதலில் நினைவுக்கு வரும் அரசியல் கட்சி சிவசேனா தான். பால் தாக்கரேவால் வளர்த்தெடுக்கப்பட்டு உத்தவ் தாக்கராவால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கட்சி அண்மையில் ஆட்டம் கண்டது. காரணம் உட்கட்சிப் பூசல். வெளிப்படையாக போர்க்கொடிய உயர்த்தியவர் ஏக்நாத் ஷிண்டே. இன்றும் தன்னை பால் தாக்கரேவின் விசுவாசி என்று தான் அடையாளப் படுத்திக் கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே. இருந்தாலும், உத்தவ் தாக்கரே அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டி பாஜக ஆதரவுடன் சிவ சேனா பி டீமாக உருவெடுத்து முதல்வராகவும் அமர்ந்துவிட்டார்.

11-ம் வகுப்பு வரை படித்த ஷிண்டே மும்பையை ஒட்டியுள்ள தானே நகருக்குச் சென்று அங்கே ஆட்டோ டிரைவராக பணி செய்தார். 1980-களில் பால் தாக்கரேவின் கொள்கைகள்மீது ஈடுபாடு ஏற்பட, சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கொள்கைகளுக்காக சிறை சென்றும் இருக்கிறார்.

1997-ல் நடந்த தானே உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்வானார். 2004-ம் ஆண்டு, தானே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் 2014, 2019 என அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி. 2019-ம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான `மகா விகாஸ் அகாதி’ கூட்டணியின் ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித் துறை அமைச்சரானார். ஆனால், பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே நெருக்கடி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், அதற்கு உத்தவ் தாக்கரே ஒப்புக் கொள்ளாததால் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராகிவிட்டார். மகாராஷ்டிரா அரசியலில் பலம் வாய்ந்த சிவ சேனாவை பாஜகவின் துணை இல்லாமல் ஏக்நாத் ஷிண்டே வீழ்த்தியிருக்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும் உத்தவ்வுக்கும், அவரது மகன் ஆதித்யாவுக்கு சவால் விட்டு அதில் வென்று தடம் பதித்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே.