பெங்களூரு: கர்நாடகாவில் குடிநீர், பாசனம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை நேற்று தொடங்கி வைத்த‌ பிரதமர் மோடி, ”வாக்கு வங்கி அரசியல் எங்களுக்கு முக்கியம் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கான அரசியலே முக்கியம்” என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்றுகர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரி, கல்புர்கி ஆகிய மாவட்டங்களில் ஜல் ஜீவன் திட்ட‌த்தின்கீழ் குடிநீர், பாசனம் உள்ளிட்ட ரூ 10 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். யாதகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கர்நாடக மாநிலத்தில் கல்யாண் கர்நாடக பகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. முந்தைய அரசுகள் யாதகிரி, கல்புர்கி, பெல்லாரி, பீஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பாடுபடவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம்.

இந்த மாவட்டங்களில் நல்ல நிர்வாகத்தின் மூலம் ரூ.10 ஆயிரத்து 800 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதனால் கடந்த 3 ஆண்டுகளில் 18 கோடி கிராமப்புற குடும்பங்களில் 11 கோடி குடும்பங்க‌ளுக்குகுடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் கவனம் செலுத்தின. இதனால் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முடங்கின. வாக்கு வங்கி அரசியல் எங்களுக்கு முக்கியம் இல்லை. வளர்ச்சி அரசியலே எங்களுக்கு முக்கியம்.

21-ம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அடுத்த 25 ஆண்டுகள் ஒவ்வொரு குடிமகனுக்கும், நாட்டுக்கும் பொற்காலமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்த‌ இந்தியாவை உருவாக்க போகிறோம். இரட்டை இயந்திர அரசு நடப்பதால் (மத்திய, மாநில பாஜக அரசுகள்) மக்களுக்கு இரட்டை நன்மை கிடைக்கிறது. இதனால் கர்நாடகா வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.