மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு தாமதமான மகாராஷ்டிராவிலும் ஹரியாணாவிலும் பாஜக பெற்றுள்ள வெற்றிகள், சிவசேனாவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். ஹரியாணாவில் பாஜக வேட்பாளர் ஒருவரும், பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 இடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, மீதமுள்ள 16 இடங்களுக்கு போட்டி இருந்ததால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
அதன்படி, கர்நாடகாவில் 4, ஹரியாணாவில் 2, ராஜஸ்தானில் 4, மகாராஷ்டிராவில் 6 இடங்கள் என மொத்தம் 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ராஜஸ்தான்: இரவு 7 மணிக்கு பிறகு ராஜஸ்தான் மாநில முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அங்கு தேர்தல் நடந்த 4 இடங்களில் 3-ல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடத்தை பாஜக வேட்பாளர் கைப்பற்றினார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முகுல் வாஸ்னிக், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றார். 2-வதாக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர் சுபாஷ் சந்திரா தோல்வி கண்டார்.
கர்நாடகா: கர்நாடகாவில் 4 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில்குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மஜத கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடா, தங்கள் கட்சி வேட்பாளருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால், அந்தக் கட்சிக்கு வாக்களித்தேன்” என்றார். அதேபோல், மற்றொரு மஜத கட்சி எம்எல்ஏ ரேவண்ணா, தான் வாக்களித்த வாக்குச்சீட்டை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார் மனுவை அளித்துள்ளது.
தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர்கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்ததும், மற்றொரு மஜத எம்எல்ஏ தான் வாக்களித்த வாக்குச்சீட்டை காங்கிரஸ் தலைவரிடம் காட்டியதும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு 9 மணி அளவில் கர்நாடகாவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 4 இடங்களில் பாஜக 3 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: இதனிடையே, மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். இதுதொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் கூட்டணியை (எம்விஏ) சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் விதிகளை மீறி வாக்களித்ததாக பாஜக புகார் தெரிவித்தது. அதேபோல ஹரியாணாவில் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று காங்கிரஸ் சார்பில் மனு தரப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், ஹரியாணாவில் 2 இடங்களுக்கும் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வரும் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா: நள்ளிரவில் வெளியான முடிவுகளில் பாஜக நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர். இது சிவசேனாவுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஓர் இடத்தை வென்றன.
பாஜக சார்பில் களம் கண்ட மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அனில் பாண்டே மற்றும் தனஞ்சய் மாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா களமிறக்கிய இருவரில் சஞ்சய் ரவுத் மட்டும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப்காதி வெற்றி பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் வெற்றி கண்டார்.
ஹரியாணா: காங்கிரஸுக்கு ஹரியாணாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தமுள்ள இரண்டு இடங்களில் பாஜகவின் கிரிஷன் லால் பன்வார் மற்றும் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸின் அஜய் மக்கான், “இது மலிவான அரசியல். இந்தியாவில் இன்னும் ஜனநாயகம் உயிரோடு இருக்கிறதா?” என்று ட்வீட் செய்திருந்தார்.