அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக இருந்தாலும், மின் உற்பத்தி பாதிக்காது என மின்சாரத் துறை அமைச்சர்செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்னகம் என்றமின்நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்துநேற்று ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான நிறுவனத்தின் இயக்குநர் மா.சிவலிங்கராஜன் மற்றும் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக மின்னகம் என்ற மின்நுகர்வோர் சேவைமையம் கடந்த ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் இதுவரை 3.83 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, அதில், 3.77 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது, 98 சதவீதம் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மின்னகத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அந்தப் புகாரின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துரிதமாக செயல்பட வேண்டும். புகார்களை நிவர்த்தி செய்ய தளவாட பொருட்கள் தேவைப்படின் அதுகுறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். எவ்வித தடையுமின்றி விரைவாக தேவைப்படும் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும்.
மேலும், செய்தித்தாள் மற்றும்சமூகவலை தளங்களில் துறை சார்ந்து வெளியாகும் செய்திகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான விளக்கத்தையும் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பருவமழை காலத்தில் மின்தடை ஏற்படாமல் தடுப்பதற்காக, சென்னையில் தரைமட்டத்தில் உள்ள 1,400 பில்லர் பாக்ஸ்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் உயர்த்தப்படும்.
அனல்மின் உற்பத்தி நிலையங்களில் 4 முதல் 5 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. அத்துடன், தொடர்ந்துதேவையான அளவு நிலக்கரி கிடைத்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்காது. மத்திய அரசு, ஒடிசா மாநிலம் சந்திரபிலா என்ற நிலக்கரி சுரங்கத்தை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது.
அந்த நிலக்கரி சுரங்கம் குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், நிலக்கரி எடுப்பது சிரமமாக உள்ளது. அப்படியே அதில் இருந்து நிலக்கரி எடுத்து வந்தாலும், அதற்கான செலவு அதிகமாக உள்ளது. எனவே, மறுஆய்வு நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 3 ஆயிரத்து 53 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பருவமழையின்போது மின்விநியோகம் தடைபடாமல் சீராக இருப்பதற்காக, ஒரு லட்சம் மின்கம்பங்கள் மற்றும் 250 கி.மீ. தூரத்துக்கான மின்கம்பிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.