புதுச்சேரியில் நடைபாதை கடைகள் அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தந்த வியாபார உரிமங்களில் நகல்களை எரித்தனர்.

புதுவையில் அரசு மற்றும் நகராட்சி அளித்த உரிமங்களுடன் சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புதுவை நகரப்பகுதிகளில் உள்ள சாலையோர, நடைபாதை வியாபாரிகளின் கடைகள் தீபாவளி வரும் சூழலில் அகற்றப்பட்டு வருகிறது.

இதற்கு நடைபாதை வியாபாரிகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கரோனா காலத்துக்கு பிறகு பொருளாதார பாதிப்பிலிருந்து மீள தீபாவளி நேரத்தில் கடைகளை அகற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவோம் என்று குறிப்பிட்டனர்.

இச்சூழலில் சிஐடியு புதுவை பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று அரசு மற்றும் நகராட்சி வழங்கிய வியாபார உரிமங்களின் நகல் எரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சாலையோர வியாபாரிகள் ராஜா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் பிரபுராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநில செயலர் ராஜாங்கம், சிஐடியூ பிரதேச செயலர் சீனுவாசன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் நகராட்சி வழங்கிய வியாபார உரிமங்களின் நகல்களை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “பண்டிகை நாளில் எங்களது கடைகளை அதிகாரிகள் அகற்றியது தவறானது. எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். எங்களது வாழ்வாதாரத்திற்கு பதில் கூற வேண்டும். சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துதல மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை பொதுப்பணித்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் அவமதித்துள்ளனர், சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு புதுவை அரசு வழங்கிய உரிமம் செல்லாது என மாவட்ட ஆட்சியர் கூறுவதை நாங்கள் கண்டித்து போராட்டத்தை நடத்துகிறோம்” என்று தெரிவித்தனர்.