புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வெள்ளை அரிசி, சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்கள் விநியோகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: “புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வின்போது அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பலக்கட்ட போராட்டங்களை நடத்துவது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான். இதன்மூலம் கடந்த காலங்களில் அவர்களுக்கு பயனும் கிடைத்துள்ளது. அதன்படியில் தற்போதும் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பொதுப்பணித் துறையில் வவுச்சர் ஊழியர்களின் ஊதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினோம். அடுத்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அந்த ஊதியத் தொகையை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
பொதுப்பணித் துறையில் 122 விடுபட்ட ஊழியர்களுக்கும் இதுபொருந்தும். மேலும் புதுச்சேரி அரசில் ஓராண்டுக்கு மேல் பணிசெய்து தேர்தல் துறையால் பணிநீக்கம் செய்யப்பட்ட 716 பேரை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ரேஷன் கடைகளில் ஏற்கனவே 10 கிலோ, 20 கிலோ வெள்ளை அரிசி கொடுத்து வந்தோம். மீண்டும் ரேஷன்கடைகள் திறக்கப்பட்டு அந்த வெள்ளை அரிசி வழங்கப்படும். மானிய விலையில் 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ கோதுமை மற்றும் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்படும்.
ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.7 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர்களுக்கு 5 மாத ஊதியம் வழங்கப்படும். புதுச்சேரி கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு கட்ட கடன் பெற்ற 485 பேர் வருகிற 30.6.2023-க்குள் அசல் தொகையை செலுத்தினால், அதற்குரிய அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.