அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்புயலுக்கு அங்குள்ள நயாகரா அருவி பாதி உறைந்த நிலையில் காணப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே, பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிக்கு பல்வேறு மாகாணங்களில் மின்சார விநியோக பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க பனிப்பொழிவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல சுற்றுலா பகுதிகளில் ஒன்றான நயாகரா அருவியானது பனியில் உறைந்து காணப்படுகிறது. பனியினால் நயாகரா அருவியின் மேற்பகுதியில் பனி படர்ந்து காணப்படுகிறது. இக்காட்சியை காண மக்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் நிலவும் பனிபொழிவை நூற்றாண்டின் பனிப்புயல் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரின் பஃபலோ பகுதி பனியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பஃபலோவில் 4 அடி வரை பனி பொழிந்திருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.