ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து முழுக்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்துள்ளார் ரஜினி. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிடவுள்ளது.
இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.