புதுச்சேரி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரிக்கு வருகை தந்து, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகின்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலத்துக்கு இன்று வருகை தந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தனி விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்த அவரை, முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலைய நுழைவு வாயிலில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் மங்கள இசையுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் ராஜிவ் காந்தி சிலை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு 12 மணிக்கு திரவுபதி முர்மு வந்தார்.

அங்கு பாஜக மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின் தரை தளத்துக்கு வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திரவுபதி முர்மு பங்கேற்றார். கூட்டத்தில் என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வ கணபதி எம்பி, துணை சபாநாயகர் ராஜவேலு, என்ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், பிரகாஷ்குமார் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள், என்ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், அதிமுக மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம் சக்திசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவை அறிமுகப்படுத்தினர். அவர், எம்எல்ஏக்கள், எம்பியிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். தொடர்ந்து பாஜா நிர்வாகிகளை சந்தித்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் முரளிதரன், எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோரும் பங்கேற்றனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தை நிறைவு செய்த திரவுபதி முர்மு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு 2.15 மணிக்கு கிளம்பி லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.