டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை ஓடும் பேருந்தில் சிலர் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு இரும்பு கம்பியால் அடித்து சித்ரவதை செய்து சாலையில் தூக்கி வீசி சென்றனர். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுபோல் மும்பையிலும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் பேசினார். அதில் பேசியவர், ‘‘மும்பையின் புறநகர் பகுதி சகினகா என்ற இடத்தில் கைரானி சாலையில் இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து சித்ரவதை செய்கிறார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்’’ என்று தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், இளம்பெண்ணை மீட்டு ரஜாவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண் உயிரிழந்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘உயிரிழந்த பெண்ணுக்கு 34 வயது இருக்கும். சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டெம்போவில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அங்கு ரத்த கறைகள் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மோகன் சவுகான் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பலாத்காரம், கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

இந்த கொடூர செயலுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘கடும் கண்டனத்துக்குரிய செயல் இது. மனிதநேயத்துக்கு மிகப்பெரிய அவமானம். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.-பிடிஐ