தமிழகத்தில் 2019-ம் ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15-ம்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கதமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வரும் 31-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக மாநிலதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்வதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஊரக வளர்ச்சித் துறையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டலவட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அந்தப் பணிகளை விரைந்து செய்யாமல் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்ட நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளனர். விரைந்து பணிமாற்றம் செய்யும்போது அந்த பகுதியில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியில் சேர்ந்தவுடன்அங்கு நடக்கும் நடப்புகளைதெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தேர்தலை நீர்த்துப் போகச் செய்யவே மாவட்ட நிர்வாகங்கள் முயல்கின்றன. எனவே,தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என்றார்.