திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழ்நாடு” என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் வன்முறை வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அமைச்சர்களே ரவுடிகள் போல் செயல்படுவது, அமைச்சர்களே பொதுமக்களை இழிவாகப் பேசுவது, அமைச்சர்கள் கவுன்சிலர்களையும், பொதுமக்களையும் அடிப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் மிரட்டுவது என்ற வரிசையில், இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக நேற்று முன்தினம் கிறிஸ்தவ மத பேராயரையே திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் தூண்டுதல் பேரில் அவரது ஆதரவாளர்கள் அடித்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

திருநெல்வேலி சிஎஸ்ஐ திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார். திருநெல்வேலி சிஎஸ்ஐ திருச்சபையின் கல்வி நிலவரக் குழுச் செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப்பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை திமுகவைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.

இந்த நிலையில், அரசியலில் தனக்குள்ள செல்வாக்கினை துஷ்பிரயோகம் செய்து, பேராயருக்கு தினமும் பல தொந்தரவுகளை கொடுப்பதை ஞானதிரவியம் வாடிக்கையாக வைத்திருந்ததையடுத்து, அவரை செயின்ட் ஜோசப் கல்லூரியின் தாளாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமித்தார் பேராயர்.

இதனால், ஆத்திரமடைந்த திமுக மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சென்ற வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், இதனைத் தீர்த்து வைக்கும் வகையில், பிஷப் காட்ப்ரே நோபிள் சிஎஸ்ஐ திருமண்டலம் சார்பில் அனுப்பப்பட்டதாகவும், இந்தத் தருணத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தாளாளர் பொறுப்பேற்பதற்கு எதிராக ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சிஎஸ்ஐ திருச்சபை மண்டல பிஷப் ஆதரவாளர்களை திமுக மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள்மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்துக்குரியது. சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியவர்களே சட்டம்-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தமிழகத்தில் காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்று ஐயப்படக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் அடியோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது. காவல் துறையினர் மீதுள்ள நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டனர்.

திமுக எம்.பி. உட்பட 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்குக் காரணம், இதற்கு முன்பு கவுன்சிலரையும், திமுகவினரையும் தாக்கிய அமைச்சர்கள் மீதோ, ஒப்பந்ததாரரை மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர் மீதோ, கல் வீசிய முன்னாள் அமைச்சர் மீதோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான்.

முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பிஷப் காட்ப்ரே நோபிள், திருநெல்வேலி சிஎஸ்ஐ. பிஷப்பன் ஆதாரவாளர்களும், அலுவலகமும், பள்ளியும் தாக்கப்பட்டதற்கு மூல காரணமாக விளங்கிய திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கைது செய்யவும்; அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, விரைவில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.