சென்னை: “ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட இந்து சமய அறநிலையத் துறைச் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,290 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவுபெற்று, குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் பழநி, திருவண்ணாமலை, திருவரங்கம், சமயபுரம் உள்ளிட்ட திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

 

திருக்கோயில் சொத்துகளையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கு இந்த அரசு எடுத்த முயற்சிகளின் விளைவாக, 6,071 ஏக்கர் நிலமும் 2,534 லட்சம் சதுர அடி மனைகளும் 5.04 லட்சம் சதுர அடி கட்டடங்களும் திருக்கோவில்கள் வசமாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 5,718 கோடி ரூபாய் ஆகும். மேலும் 143 திருக்கோயில்களில் திருக்குளங்களைச் சீரமைக்க 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகத் துறை மூலமாக 200 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்