திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக மகளிரணி வலியுறுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜய காந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பெண்கள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டம் இயற்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வால் மாணவ, மாணவிகளை குழப்பி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த நிலையை தடுத்து தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தேமுதிக ஆட்சி மலர அனைத்து பெண்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.