கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக் கழக மானியக் குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது.

ஹைதராபாத் மத்தியப் பல்கலைழகத்தில் சாதியப் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா மற்றும் மகாராஷ்டிரா மருத்துவக் கல்லூரியில் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி பாயல் தாட்வி ஆகியோரின் தாய்மார்கள் தொடர்ந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போப்பண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

கல்லூரிகளில் சாதியப் பாகுபாட்டால் எதிர்காலத்தில் இனியும் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழக்கக் கூடாது. அதற்கு யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரி அவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் விவரம்: சாதியப் பாகுபாட்டால் எதிர்காலத்தில் இனியும் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழக்கக் கூடாது. அதற்கு யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

அதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவானது அதன் சட்டத்திட்டங்களின் படி உயர் கல்வி வளாகங்களில் சமத்துவத்தை பேணுவதை உறுதி செய்ய வேண்டும். உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றில் சம வாய்ப்பு மையங்களை உருவாக்கிய அதன் மூலம் மாணவர்களின் குறைகளை அறிய வேண்டும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் தங்கள் இணையதளங்களில் சாதிப் பாகுபாட்டை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை விவரிக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் கல்லூரிகளை ஆய்வு செய்து அங்கீகரிக்கும் நேக் (NAAC) பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் உகந்த சூழல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், “கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக்கழக மாணியக் குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான முயற்சியில் இனி யுஜிசி மனுதாரர்களையும் ஆலோசித்து கொள்கைகளை வகுக்க வேண்டும்.

மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ சமுதாயத்தை முன்னணிக்கு கொண்டுவர யுஜிசி என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என்றார். கூடவே, கல்லூரி வளாகங்களில் அச்சமுதாய மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள் எண்ணற்றவையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.