இதுதொடர்பாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி இணையதளத்தில் இருந்து ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு ஆராய்ச்சியாளர் அதுல் நாயர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் கிசான் இணையதளத்தில் உள்ள டாஷ்போர்டில் உள்ள ஓர் அம்சம் மூலம் நீங்கள் பல்வேறு வகையான சார்ட்டுகளையும் தரவுகளையும் பார்க்க முடியும். இதில் விவசாயிகளின் மாநிலம், மாவட்டம், கிராமம் ஆகியவை குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதமர் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற பதிவு செய்துள்ளனர். ஹேக்கர்களால் விவசாயிகளின் தனிப்பட்ட விவரங்களை திருடிவிட முடியும். இதுதொடர்பாக இந்திய கணினி அவசர தீர்வு குழுவுக்கு தகவல்கள் தெரிவித்துவிட்டேன். கடந்த மாதம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டில் இண்டேன் எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை டீலர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் வெளியிட்டது. அதே ஆண்டு ஜார்க்கண்ட் அரசு ஊழியர்களின் ஆதார் தகவல்கள் கணினி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிரதமரின் திட்டத்தின் கீழ் ஆன்லைன் முறையில் வங்கிக் கணக்கில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நேரடியாக ரூ.6,000 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.