குடும்ப பெண்களுக்கு மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் 6 மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் சேனூர் அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை மற்றும் கோடாவாரிப்பள்ளியில் புதிதாக நியாய விலை கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய நியாய விலை கடைகளை திறந்து வைத்துப் பேசும்போது, “திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ் வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குடும்ப பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற திட்டம் வரும் 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடி அடுத்த வள்ளி மலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வள்ளிமலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுப்பேன்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, பயிர்கடன் பயனாளிகளுக்கு ரூ.4.45 லட்சம் கடன் தொகையும், 13 சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.