இந்தியன் ரேசிங் லீக்கின் முதல் சீசன் போட்டியானது (ஃபார்முலா 3) வரும் 19-ம் ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் தொடங்குகிறது. தொழில்முறை ரீதியாக நடத்தப்படும் இந்தத் தொடரில் சென்னை டர்போ ரைடர்ஸ், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், காட்ஸ்பீடு கொச்சி, கோவா ஏசஸ் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் சென்னை டர்டோ ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களாக அக்கார்டு குரூப் & பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் நிறுவனம் உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஓட்டுநர்களை ஒன்றிணைத்து களமிறங்குகிறது. இந்த போட்டி மொத்தம் 4 பந்தயங்களை கொண்டது. ஒவ்வொரு பந்தயத்துக்கும் 3 சுற்றுகள் இருக்கும்.
இந்த வகையில் மொத்தம் 12 சுற்றுகள் நடத்தப்படும். இதில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும். முதல் சுற்று ஹைதராபாத்தில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது சுற்று சென்னை இருங்காட்டுக்கோட்டையில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. கடைசி சுற்று டிசம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 2 கார்களை கொண்டிருக்கும். இதில் 4 ஓட்டுநர்கள் இடம் பெறுவார்கள். இதில் ஒருவர் வீராங்கனையாக இருப்பார். இந்த வகையில் மொத்தம் 12 கார்களுடன் 24 ஓட்டுநர்கள் பந்தயங்களில் பங்கேற்கின்றனர். இந்த பந்தயத்தில் இத்தாலிய ஸ்போர்ட் ப்ரோடோடைப் சாம்பியன்ஷிப்பில் பயன்படுத்தப்படும் வுல்ஃப் ஜிபி08 தண்டர் ப்ரோடோடைப்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் பார்முலா 4 பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார்களைவிட அதிக திறன் வாய்ந்தது.
சென்னை அணியில் 13 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஷ்ணு பிரசாத், 5 முறை தேசிய சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ள மகாராஷ்ராவைச் பார்த் கோர்படே, இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்முறை ஓட்டுநர் ஜான் லான்காஸ்டர் ஆகியோருடன் இங்கிலாந்தின் 16 வயது மாணவியான நிக்கோல் ஹவ்ர்டா இடம் பெற்றுள்ளார். ரூ.150 கோடி செலவில் நடத்தப்படும் இந்த பந்தயத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.