இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரதமராக இருந்த ராஜபக்ச தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனால் அரசு ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இலங்கையின் கிழக்கு மாகாணமான திரிகோணமலை பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் வந்த ராஜபக்சயின் குடும்பத்தினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் திரிகோணமலை கடற்படை முகாமில் பலத்த பாதுகாப்பில் கடற்படையினரும், திரிகோணமலை சீனன்குடா விமான நிலையம் பகுதியில் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீட்டினை தீயிட்டனர்.

இச்சூழலில், மகிந்தராஜபக்சயின் மகனான நமல் பக்சே சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் எனவும், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஒரு முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், இலங்கை அரசியலில் ஸ்திரதன்மையை ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எனவே மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.