நியூயார்க்: மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தோஸ்டார்லிமாப் மருந்து தொடர்ந்து ஆறு மாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் புற்றுநோய் முழுவதுமாக குணமானது தெரிய வந்திருக்கிறது.

இதனை என்டோஸ்கோபி, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். டோஸ்டார்லிமாப் என்பது மனித உடலில் மாற்று ஆன்டிபாடிகளாக செயல்படும் மருந்தாகும்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகள் இந்தப் பரிசோதனைக்காக எடுத்து கொள்ளப்பட்டனர். இவர்கள் இதற்கு முன்னர் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டவர்கள். அதன் பின்னரே அவர்களுக்கு இந்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இதன் முடிவில் ஆச்சரியம் காத்திருந்தது. இந்த சிகிச்சையிலேயே அவர்கள் முழுமையாக குணமாகினர். அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை. அனைத்து நோயாளிகளுக்கு புற்றுநோய் முழுமையாக குணமாகியுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு தற்போது மருத்துவ உலகில் நேர்மறை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவுகளில் உலகிலேயே முதல் ஆராய்ச்சி இது. தொடர்ந்து அடுத்தகட்ட பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன” என்று குறிப்பிட்டனர்.

தாங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டதை அறிந்த நோயாளிகள் கண்ணீர்விட்டு அழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இம்மருந்து இன்னும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகளுக்கு வழக்கப்பட்டு, தொடர் பரிசோதனைகள் நடத்தப்படும். அதன் பின்னரே இம்மருந்துகள் பொதுவெளிக்கு வரும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.