சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர்.

சீன நாட்டைச் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கப் பதிவு செயய்ப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் டெல்லியிலிருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின்போது, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓர் அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த அறையில் சோதனை நடத்தப்படவில்லை. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அந்த அறையில் மட்டும் டெல்லியிலிருந்து வந்திருக்கக்கூடிய 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.