ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் 3,000 பேருக்கு மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணி வாய்ப்பின் மூலம், மாநில மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. பழைய சவால்களை நீங்கள் புறம்தள்ளிவிட்டு, புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான நேரம் தற்போது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிக்கான வரலாற்றை நீங்கள் படைக்க வேண்டும். புதிய அணுகுமுறை, புதிய சிந்தனை ஆகியவற்றின் மூலம் வளர்ச்சிக்கான வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2019 முதல் 30 ஆயிரம் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் அரசு துறைகளில் வழங்கப்பட்டுள்ளன. புதிய வேலைவாய்ப்புகள் ஜம்மு காஷமீர் இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்புகளை வழங்கவும், சுய தொழில்களை தொடங்கவும் தேவையான ஊக்குவிப்புகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு காஷமீரில் தற்போது தொழில் தொடங்குவதற்கான சூழல் சிறப்பானதாக மாறி இருக்கிறது. எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ப தொழிற் கொள்கைகளை மத்திய அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கு தனிசரி விமான சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. ஜம்மு காஷமீரில் விளையும் ஆப்பிள்களை விவசாயிகள், ரயில்கள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கு மிக எளிதாக அனுப்பி வருகின்றனர். ஜம்மு காஷமீரில் சுற்றுலாவும் தற்போது மேம்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.