திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்காண பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பழநி நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கினர்.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர்.

லட்சக்ணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்ததால் கிரிவீதி, சந்நதி வீதிகள் உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகள் ஆடி வந்தனர். பலர் அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பழநியில் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.