தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு விரைவில் 6 பல்கலைக்கழகங்களில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக ‘சமூக நீதிக் கண்காணிப்பு குழ’ அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். சுப.வீரபாண்டியன் தலைமையிலான இந்தக் குழுவில் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் 5-வது கூட்டம் கடந்த 21-ம் தேதி குழுவில் தலைவர் முனைவர்.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் 2022 டிசம்பர் மாதத்திற்குள் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.