உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை அன்றாடம் தரிசிக்க உத்தரவிட கோரிமாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த குழு, கோயிலை ஒட்டியுள்ளகியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு தொடங்கியது.
குழுவின் ஆணையர் மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் நடந்த கள ஆய்வில் அனைத்து தரப்பின் சார்பில் 36 பேர் பார்வையாளர்களாக இடம்பெற்றனர். சுமார் 4 மணி நேரம் எந்த தடையும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை கள ஆய்வு நடைபெற்றது.
மறுநாள் சனிக்கிழமை ஆய்வு நடத்த மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியாவினர் திடீரென ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், மசூதியின் உள்ளே சென்ற ஆணையர் அஜய் மிஸ்ராஉடனடியாக திரும்பினார். ‘‘ஆய்வுசெய்ய விடாமல் மசூதி நிர்வாகத்தினர் உட்புற வாயிலை அடைத்த படி நின்றனர்’’ என்று புகார் தெரிவித்தார். அங்கு பாதுகாப்பில் இருந்தபோலீஸாரும், ஆய்வுக் குழுவினருக்கு ஒத்துழைக்கவில்லை.
இந்நிலையில், வழக்கை விசாரிக்கும் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகரிடம், அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் புதிய மனு சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், ‘‘ஆணையர் அஜய் மிஸ்ராவின் கள ஆய்வு ஒருதலைபட்சமாக இருக்கிறது. எனவே, அஜய்மிஸ்ராவுக்கு பதில் வேறு ஆணையர் அமர்த்த வேண்டும்’’ என்று கோரப்பட்டது.
அதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதி திவாகர், வழக்கை மே 9திங்கட்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார். ஆணையர் மற்றும் வழக்கின் மனுதாரர் தரப்பிலும் விசாரித்த பின் இன்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கியான்வாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. இதை, காசி விஸ்வநாதர் கோயிலின் முக்தி மண்டபத்தில் இருந்தபடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். இந்நிலையில், அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி கோரி வந்தனர். ஆனால், அயோத்தி பாபர் மசூதி இடிப்பு காணமாக கடந்த 1991-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்க கோரி, கடந்த ஆக. 18, 2012-ம் ஆண்டு டெல்லியில் வசிக்கும் 5 பெண்கள் மனு அளித்திருந்தனர்.
இவ்வழக்கில் சிங்கார கவுரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. கள ஆய்வின் போது இந்து, முஸ்லிம்கள் சார்பில்மூத்த வழக்கறிஞர்களும் உடன்இருந்தனர். இவர்கள் ராமர் கோயில்- பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர்கள். இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் எம்.பி. அசதுதீன் ஒவைசி நேற்று கூறும்போது, ‘‘கள ஆய்வை சட்டத்துக்கு புறம் பானது’’ என்று தெரிவித்தார்.