சென்னை பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கதிர்வீச்சு சிகிச்சையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
இந்த மருத்துவமனையில் ரூ.20 கோடியில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சைக்காக, அதிநவீன தொழில்நுட்பத்திலான ‘எலெக்டா இன்ஃபினிட்டி லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ கருவி நிறுவப்பட்டுள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தக் கருவியின் செயல்பாட்டை தொடங்கிவைத்தார்.
அப்போது, மருத்துவமனை சார்பில் கரோனா நிதியாக ரூ.10 லட்சம் காசோலை அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் டி.ஜி.கோவிந்தராஜன், இயக்குநர்கள் ஜெயந்தி கோவிந்தராஜன், சிவரஞ்சனி, தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இம்மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவர் டி.ஜி.கோவிந்தராஜன், அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவையாற்றி வருகிறார். தனது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததால், அவரது நினைவாக இருந்த மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். இதில் கிடைக்கும் வருவாயை வேறு எதிலும் முதலீடு செய்யாமல், இப்பகுதி மக்கள் பயன்பெறுவதற்காக மருத்துவமனையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார். புற்றுநோய்க்கு முடிந்த வரை தீர்வுகாண மருத்துவமனையை நடத்தி வருகிறார். அவரது மருத்துவ சேவை போற்றத்தக்கது.
இந்த புதிய கருவி, கருவில் இருக்கும் கட்டியை ஒரே நிமிடத்தில் கரைக்கும் என்றும், அரசு மருத்துவமனையில் இருக்கும் கருவி, கட்டியை கரைக்க 20 நிமிடம் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்தனர். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் இருக்கும் கருவியைப்போல, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாங்குவதற்கு, அதிகாரிகளிடம் அறிவுறுத்த உள்ளேன்.
இங்கு சிகிச்சைக்கு ரூ.1.50 லட்சம் செலவாகும் நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.40 ஆயிரத்தில் சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டி.ஜி.கோவிந்தராஜனின் மருத்துவ சேவை தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறப்பு கவனம்…
முன்னதாக, மருத்துவமனை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் டி.ஜி.கோவிந்தராஜன் பேசியதாவது: இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்காக முழு அர்ப்பணிப்புடன் பங்காற்றி வருகிறோம்.
கதிர்வீச்சு முறையில் புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காகவே எலெக்டா இன்ஃபினிட்டி லீனியர் ஆக்ஸிலரேட்டர் என்ற அதிநவீன கருவி நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்தகைய அதிநவீன உயர் தொழில்நுட்பவசதி கொண்ட கருவி வேறெங்கும் இல்லை.
புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கும்போது, அந்த கதிர்கள் பாதிப்புள்ள செல்களை மட்டுமே தாக்கும். மூளையில் ஏற்படும் கட்டி உள்ளிட்ட நுட்பமான பாதிப்புகளுக்கான சிகிச்சையை முன்பிருந்ததைவிட சிறப்பாக மேற்கொள்ள உதவும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற முடியும். புற்றுநோயை அறுவைசிகிச்சை, கீமோதெரபி, மருந்துகள், கதிர்வீச்சு என ஏதோ ஒருவகையில் சரி செய்ய முடியும். எனவே, இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் திறனை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.