பிரதமர் கனவில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் உள்ளனர். எப்படியிருந்தாலும், 400 எம்பிக்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசுகையில்,”தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் மட்டுமே உள்ளது. அது ஒரு பகல் கனவு நிதி நிலை அறிக்கையாகும். தமிழக அரசின் கடன் தொகை ரூ.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தமிழக மக்கள் மீது கடுமையான கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் தமிழக அரசு தான் அதிகளவில் கடன் வாங்கியுள்ளது. ரூ.7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக காட்டுகிறார்கள். அது உண்மையாக இருந்தால் அடுத்த ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.80,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியவர்கள், இப்படியொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது எப்படி நியாயமாகும்? தேர்தல் அறிக்கையில் மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 தருவதாக திமுக தெரிவித்தது. அதை நிறைவேற்றவில்லை. அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் அளிப்பதை வரவேற்கிறோம். ஆனால், 36 மாதங்களுக்கு 5 லட்சம் பேருக்கு மாதம் ரூ.ஆயிரம் கொடுக்க முடியுமா? தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதியை வேறு திட்டத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

நிதி நிலை அறிக்கையில் தொலை நோக்கு பார்வையில்லை, தெளிவு, புரிதல் இல்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக கொடுத்துள்ளது. அதனால் தான் மாநில அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் நிலுவைத் தொகையை வழங்காமல் இருப்பது இல்லை. மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை.

எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு வந்த தமிழக அரசு, நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு நிலுவை தொகையை வழங்கியதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி புதிய திட்டம் போல் அறிவித்துள்ளனர். திட்டங்களுக்கு எந்த பெயர் சூட்டினாலும் தமிழக மக்கள் பயன் பெற்றால் போதும். தமிழகத்தை கடன் சுமையிலிருந்து வெளியே கொண்டு வந்து வருவாயை பெருக்க புதிய வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக தமிழக ஆளுனரிடம் மார்ச் 21-ல் புகார் அளிக்கவுள்ளோம். பிஜிஆர் நிறுவனத்தில் சோதனையிட வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழக அரசு வித்தியாசமான அரசு என்பதை நிரூபிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அரசு என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

பிரதமர், துணை பிரதமர் கனவில் பல தலைவர்கள் உள்ளனர். இந்த கனவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் உள்ளனர். எப்படியிருந்தாலும் 400 எம்பிக்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்று கூறினார்.

பாஜக மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் அண்ணாமலை பங்கேற்றார்.