கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக, பள்ளி முதல்வர் மீதும் போக்சோ பிரிவில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை மாநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த மாணவி, நேற்று முன்தினம் (11-ம் தேதி) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த உக்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மாணவி தற்கொலை செய்த அறையில், அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், சில மாணவிகள், ஒரு ஆசிரியரைக் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த மாணவிக்கு, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் கூறும்போது, ‘‘எங்களது மகள் முதலில் தடாகம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். கரோனா அச்சம் காரணமாகக் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. அப்போது அவரது பள்ளியின் இயற்பியல் பிரிவு ஆசிரியர் மகளிடம் தவறாகப் பேசியுள்ளார். அதை அவர் அச்சம் காரணமாக எங்களிடம் தெரிவிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் தொடங்கியபோது, எங்களது மகளுக்கு அந்த ஆசிரியர் மீண்டும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்த எங்களது மகள் இவ்விவகாரம் தொடர்பாக, தனது தோழரிடம் தெரிவித்து அழுதுள்ளார். அவர் மூலம் இந்தத் தகவல்கள் எங்களுக்குத் தெரியவந்தன. பின்னர், நாங்கள் எங்கள் மகளை அந்தப் பள்ளியில் இருந்து மாற்றி, இப்பகுதியிலுள்ள பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தோம். ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மனமுடைந்த எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
ஆசிரியர் கைது
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் காவல்துறையினர் இவ்வழக்கை விசாரித்தனர். பின்னர், வழக்கு மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மகளிர் காவல்துறையினர் போக்சோ, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நேற்று (12-ம் தேதி) வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால், உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், இன்று (13-ம் தேதி) காலை அங்கு திரண்ட சக மாணவர்கள், கருப்பு உடை அணிந்து வந்து, மாணவியின் இறப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மாணவியின் வீடு முன்பு திரண்ட பல்வேறு அமைப்பினர், உடன் பயின்ற சக மாணவர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து, நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம், தனியார் பள்ளி முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மாணவியின் பெற்றோரைச் சந்தித்து கோவை மாநகரத் தெற்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். மாணவியின் பெற்றோரைச் சந்தித்து கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக், எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் ஆறுதல் கூறினர். ட்விட்டரில் மாணவி இறப்புக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் இன்று இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
பள்ளி முதல்வர் மீது வழக்கு
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ பிரிவில் மாநகர மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி, தனக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து முன்னரே புகார் அளித்தும், அது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காமல், மறைக்கும் வகையில் செயல்பட்டதால், போக்சோ வழக்குப் பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள, பள்ளி முதல்வரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்துக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.