அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதுபோன்ற சூழலில், அணுக்கழிவு மையத்தையும் கூடங்குளம் வளாகத்தில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் பணிகள் குறித்த முழுமையான திட்ட அறிக்கையை வழங்காமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக வரும் 14-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நெல்லையில் நடத்த உள்ளோம். அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் கலந்தாலோசித்து, போராட்டத்தை நடத்துவது குறித்து முடிவு செய்வோம்.

வழக்குகளை வாபஸ் பெறுக..

தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுவேன் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், 63 வழக்குகளை இன்னும் திரும்பப் பெறாமல் வைத்துள்ளார். இதன் காரணமாக, அந்தப் பகுதி மக்களுக்கு பாஸ்போர்ட் கூட கிடைப்பதில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்த போதிலும், காவல்துறையினர் நற்சான்றிதழ் வழங்காமல் அச்சுறுத்துகிறார்கள். எனவே தமிழக முதல்வர் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு 63 வழக்குகளையும் வாபஸ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.