நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்களை எடுத்துக் கொடுத்தார் இந்திய வீரர் அஸ்வின். அவரது பேட்டிங் அறிவாற்றலை மனதார போற்றி உள்ளார் மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி. அந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டிரைக்கில் அஸ்வின் இருந்தார். ஆனால், அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் லாங்க்-ஆப் திசையில் பந்தை விரட்டி வெற்றிக்கான ரன்களை எடுத்தார் அஸ்வின்.

“பந்தை கவர் திசையில் அடிக்குமாறு நான் அஸ்வினிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ தனக்கு இருக்கும் அபார கிரிக்கெட் ஞானத்தை பயன்படுத்தினார். அதை செய்ய அவருக்கு ஒருவிதமான துணிச்சலும் தேவை. பந்து கிரீஸிக்குள் வந்தது. அதனை அவர் ஒயிடாக மாற்றினார்” என கோலி பாராட்டி இருந்தார். ஆட்டம் முடிந்த பிறகு அவர் இதை சொல்லி இருந்தார்.

இந்தப் போட்டியில் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அவரது அபார ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை வசம் ஆக்கியது.