வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் 15 மாடிகளுடனும், வரகனேரியில் 14 மாடிகளுடனும் பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை திருச்சியிலேயே அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளாகும்.

ஒவ்வொரு நகரிலும் அதிக உயரமான கட்டிடங்கள், அந்நகரத்தின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும். அந்த வகையில் திருச்சியில் எடமலைப்பட்டிபுதூர், நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் நகரின் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.

அவற்றை மிஞ்சி, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் திருச்சியில் 15 மற்றும் 14 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அரசு ஊழியர்கள் குடியிருப்பு

இதன்படி அரசு ஊழியர்களுக்கு வாடகை அடிப்படையில் வீடு வழங்கும் வகையில் மன்னார்புரம் பழைய சுற்றுலா மாளிகை காலனியில் 3.30 ஏக்கர் பரப்பளவில் ரூ.103.5 கோடி செலவில் 464 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 4 கட்டிடங்களாக(ப்ளாக்) அமைக்கப்படும் இக்குடியிருப்பின் 2 கட்டிடங்கள் 15 தளங்களுடனும், மீதமுள்ள 2 கட்டிடங்கள் 14 தளங்களுடனும் கட்டப்படுகின்றன. இதிலுள்ள ‘ஏ’ வகை வீடுகள் 1,062 சதுர அடியிலும், ‘பி’ வகை வீடுகள் 969 சதுர அடியிலும், ‘சி’ வகை வீடுகள் 828 சதுர அடியிலும், ‘டி’ வகை வீடுகள் 678 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்படுகின்றன.

பொதுமக்களுக்கான 3 பிரிவுகள்

இதுதவிர பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் காந்தி மார்க்கெட்டிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் வரகனேரி பகுதியில் 14 மாடிகளுடன்கூடிய அடுக்குமாடி வீடு கட்டும் திட்டப் பணிகளையும் வீட்டு வசதி வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இங்கு உயர் வருவாய் பிரிவுக்கு 56, மத்திய வருவாய் பிரிவுக்கு 84, குறைந்த வருவாய் பிரிவுக்கு 52 என 3 பிரிவுகளில் சுமார் ரூ.96.75 கோடி செலவில் 192 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் முதற்கட்டமாக உயர் வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 14 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 4 வீடுகள் கட்டப்படுகின்றன.

இதில் ஒவ்வொரு வீடும் 3 படுக்கை அறை, இதில் அறைகளுடன் இணைந்த 2 குளியல் அறை, ஒரு பொது குளியலறை, 2 பால்கனி, ஹால், சமையல் அறை உள்ளிட்டவற்றுடன் 1,517 முதல் 1575 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகின்றன. 2 லிப்ட் மற்றும் 2 இடங்களில் படிக்கட்டு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

உயர் வருவாய் பிரிவுக்கான கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டப்பட உள்ளன.

வீடுகளின் விலை

இதேபோல, மத்திய வருவாய் பிரிவினருக்கான கட்டிடமும் 14 மாடிகளுடன் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் தலா 6 வீடுகள் 1,137 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகின்றன. அதேபோல குறைந்த வருவாய் பிரிவினருக்கான கட்டிடம் 13 மாடிகளுடன் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் தலா 4 வீடுகள் 744 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளன. உயர் வருவாய் பிரிவினருக்கான வீடுகள் ரூ.66.82 லட்சம் முதல் ரூ.69.38 லட்சம் வரையிலும், மத்திய பிரிவினருக்கான வீடுகள் சுமார் ரூ.50 லட்சம் வரையிலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் ரூ.33 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்படலாம் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியாருக்கு நிகரான வசதிகள்

இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘‘நவீன வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறோம்.

இந்தக் குடியிருப்புகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள், வளாகம் முழுவதும் தரைத்தள ஓடுகள், அகலமான சாலைகள், பூங்கா, வாகனங்களை நிறுத்த தனிப்பகுதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. கடந்தாண்டு நாங்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி திருச்சியில் அதிகபட்சமாக 14 மாடிகளைக் கொண்ட குடியிருப்புகளுக்குத்தான் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிகிறது. இவை செயல்பாட்டுக்கு வரும்போது மன்னார்புரத்தில் கட்டப்படும் 15 மாடிகளைக் கொண்ட கட்டிடம்தான், திருச்சியில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும்’’ என்றனர்.