ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று மாலை 35 மாணவர்களை ஏற்றிக் கொண்டு தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்றபோது பேருந்தின் முன் பகுதியிலிருந்து திடீரென புகை வந்தது. உடனே ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தபோது பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

உடனே அவர் எச்சரித்ததையடுத்து, பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் பதறியடித்தபடி பேருந்திலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

வாகன புதுப்பிப்பு சான்று

தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு அதிகாரி செல்வன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீ விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்துக்கு, கடந்த 5 தினங்களுக்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகன புதுப்பிப்பு சான்று பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.