தமிழகத்தின் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை உள்ளிடட் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மழை பாதிப்புகள் குறித்து வேளச்சேரி பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில், இன்று (நவ.12) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை செய்தார். மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள், நிவாரணப் பணிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், குறித்த பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் நேற்று பெய்த கனமழையால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழியில் பதிவான 44 செ.மீ மழைப்பொழிவால் அந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.