பேராவூரணி அருகே ஆதரவற்ற நிலையில் இருந்தவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியின் பேரில் வீடுகள் கட்டித்தரப்பட்டன. மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று திறப்பு விழாவில் பங்கேற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி, மூளை நரம்பியல் பிரச்சினை உடைய மாற்றுதிறனாளி. கண்ணையா கடந்த ஆண்டு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவி செல்வி சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.
மிகவும் சேதமடைந்த கூரைவீட்டில் பாண்டிமீனா, தனது தங்கையுடன் வசித்து வந்தார். இதுகுறித்து அவர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கோரினார். மேலும், தான் வசிக்கும் கூரை வீட்டை புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, பாண்டிமீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாயையும், தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாயும் முதற்கட்டமாக வழங்கினார். பின்னர், தன்னார்வலர்களையும் இணைத்து நிதி உதவி கிடைக்கச் செய்தார். பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவிகளின் மூலம் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று (4-ம் தேதி) காலை பாண்டிமீனாவின் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதிய வீட்டை பாண்டிமீனாளிடம் ஒப்படைத்து, அவரை ரிப்பன் வெட்ட வைத்து, குத்து விளக்கு ஏற்ற வைத்தார். மேலும், பாண்டிமீனாளுக்கும் அவரது தங்கைக்கும் புத்தாடைகளை வழங்கினார்.
இதுகுறித்து பாண்டிமீனா கூறியதாவது: வீடு இல்லாமல், பெற்றோர்களும் இல்லாமல் நிர்க்கதியான நிலைக்கு நானும் எனது தங்கையும் தள்ளப்பட்டோம். மாவட்ட ஆட்சியர் செய்த உதவி பெரிய அளவில் எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆட்சியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பலர், எனது படிப்புக்கும், வேலைக்கும் உதவி வருகின்றனர். பெற்றோர் இருந்தபோது தங்கையின் மூளை வளர்ச்சிக்காக மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தோம். போதிய வசதி இல்லாததால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது சிரம்மாக உள்ளது.
மாணவனுக்கு வீடு: இதேபோல், பேராவூரணி ஒன்றியம் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார் (21), விஷ்ணுவர்தன் (17). சகோதரர்கள். இவரது பெற்றோர் கருணாநிதி –சரளா சில ஆண்டுகலுக்கு முன்பு இறந்துவிட்டனர். பாட்டி ரேணுகா(65), கூலி வேலைசெய்து பேரன்களை கவனித்து வருகிறார்.
ரேணுகாவின் குடிசை வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது. வீடு இருந்த சுவடே தெரியாத அளவுக்குக் மாறியது. இந்நிலையில், தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு சகோதர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப்பில் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, அவர்களுக்கு முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும், தனது விருப்ப நிதி மற்றும் தன்னார்வர்களின் நிதி ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ. 5 லட்சத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சகோதரர்களிடம் இன்று வீட்டை ஒப்படைத்தார்.
இவ்விரு நிகழ்ச்சியிலும், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர்கள் சுகுமார் (பேராவூரணி) ராமச்சந்திரன் (பட்டுக்கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் (சேதுபாவாசத்திரம்), தவமணி, செல்வந்திரன் (பேராவூரணி), லயன்ஸ் மாவட்ட ஆளுநர் சேதுசுப்பிரமணியன், முன்னாள் ஆளுநர் முகமது ரஃபி, மண்டல தலைவர் சிவராஜ், மாவட்டத் தலைவர் ஸ்டாலின் பீட்டர் பாபு, நிர்வாகிகள் ராமமூர்த்தி, காந்தி, கனகராஜ், வட்டாரத் தலைவர் ராஜா, தலைவர் ராமநாதன், செயலாளர் ஆதித்யன், பிரபு, பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர்கள் மு.கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்), சசிகலா ரவிசங்கர் (பேராவூரணி), சாந்தி சேகர் (பேராவூரணி பேரூராட்சி தலைவர்), ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாரிமுத்து (களத்தூர்), கண்ணம்மாள் கண்ணன் (ரெட்டவயல்) மற்றும் பலர் கலந்து கொண்டனர் .