மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பப்ஜி விளையாடி தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், சிறுவர்களை ஆன்லைன் ஸ்மார்ட்போன் விளையாட்டான பப்ஜி கட்டிப்போட்டு வைத்திருந்தது. எண்ணிலடங்கா இளைஞர்களும், சிறுவர்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருந்தனர். நாள் முழுவதும் இந்த விளையாட்டை விளையாடுவதைக் கடந்து அதில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழக்கும் சம்பவம் நடைபெற்றுவந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு பப்ஜி விளையாட்டை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்தது.
இருப்பினும், இணையத்தில் சில வழிகளைக் கண்டுபிடித்து இன்னமும் பலர் பப்ஜி விளையாட்டை விளையாடிவருகின்றனர். இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்துள்ளான். அவன், பப்ஜி விளையாட்டில் அடையாள அட்டை பெறுவதற்கும், விர்ச்சுவல் கரண்சி பெறுவதற்காகவும் அம்மாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி செலவு செய்துள்ளான்.
அதிலிருந்து 10 லட்ச ரூபாயை பப்ஜி விளையாட்டில் இழந்துள்ளான். இந்த விவகாரம், அவனது பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவனை கடுமையாக திட்டியுள்ளனர்.
அதனால், கோபித்துக்கொண்ட அந்த சிறுவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டான். அதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து காவல்துறையினர் வீட்டைவிட்டு ஓடிச் சென்ற சிறுவனைக் கண்டுபிடித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.