கரூர் நகர போக்குவரத்து பிரிவில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக, தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூரில் ஜவுளி, கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள், பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்கள் போன்ற முக்கிய தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இந்த நிறுவனங்களில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏரளமானோர் வேலைக்கு வருகின்றனர். இதனால், காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்கள் பணிக்கு வரும்போதும், வேலை முடிந்து செல்லும்போதும் கரூர் நகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை சீரமைக்க, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, காமராஜர் சிலை, திருகாம்புலியூர், செங்குந்தபுரம் பிரிவு, வையாபுரி நகர், லைட்ஹவுஸ், திண்ணப்பா திரையரங்க முனை, சர்ச் முனை, வெங்கமேடு பாலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, அரசியல் கட்சிகளின் பேரணிகள், ஆர்ப்பாட்டம், விழாக்கள், விஐபிகள் வருகையின்போதும் போக்குவரத்தை சீரமைக்க வேண்டியுள்ளது.

போலீஸார் பற்றாக்குறை

கரூர் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் தலா ஒரு இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர் உட்பட 78 பணியிடங்கள் உள்ளன. ஆனால், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 38 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 1 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 40 பணியிடங்கள்(50 சதவீதத்துக்கும் மேல்) நிரப்பப்படாமல் உள்ளன.

பணியில் உள்ள 38 பேரில், 15 பேர் மாற்றுப்பணிகளில் உள்ளனர். மீதமுள்ள 23 பேரில் எழுத்தர், கணினி இயக்குநர், இன்ஸ்பெக்டரின் வாகன ஓட்டுநர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் பைக் ரைடர் உள்ளிட்ட பணிகளுக்கு 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் வரை விடுப்பில் இருப்பர்.

எனவே, மீதம் உள்ள 15-க்கும் குறைவானவர்களை கொண்டே கரூர் நகரில் உள்ள பீட்களுக்கு போலீஸார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீஸ் பற்றாக்குறையால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

இதுகுறித்து கரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மு.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘போதிய போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் இருக்கும் 15-க்கும் குறைவான காவலர்களை கொண்டுதான் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி, வாகன சோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போது ஆயுதப்படை காவலர்களைக் கொண்டு போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ப.சுந்தரவடிவேலுவிடம் கேட்டபோது, ‘‘போதிய அளவு போக்குவரத்து போலீஸாரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.