கோவை மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டெக்ஸ்டைல், பவுண்டரி, வெட்கிரைண்டர், பிளாஸ்டிக், பம்ப்செட், ஆட்டோமொபைல், ராணுவ தளவாட உதிரிபாகங்கள், கப்பல் தயாரிப்பு உதிரிபாகங்கள், ஜவுளித்துறை உற்பத்திக்கான இயந்திரங்கள் தயாரிப்பு, நெசவு, நூற்பாலை தொழில்கள் பிரதானமாக உள்ளன.
இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறுந்தொழில் முன்வோர்களாக உள்ளனர். இவற்றை சார்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
கரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரவலின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதிப்புகளால் தொழில் நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.
தொழில் துறையினர் கவலை
இந்நிலையில், கோவையில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது தொழில் துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளது. கரோனா தொற்றின் 3-ம் அலை பரவலின் தாக்கம் பெரிய அளவில் இருந்தால், அதனை எதிர்கொள்ள கோவை தொழில் துறையினர் தற்போதே தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் தொற்று பரவல் அதிகரித்து மீண்டும் தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதை தொழில் துறையினர் விரும்பவில்லை. மாறாக அரசு இவ்விவகாரத்தில் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “கரோனா தொற்றில் முதல் 2 அலைகளை சந்தித்து தற்போது மெதுவாக மீண்டு வருகிறோம். இச்சூழலில் மீண்டும் தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். தொழில் நிறுவனங்களை மூடுவதும், ஊரடங்கை அமல்படுத்துவதும் வேண்டாம் என நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளோம்.
தொழிலாளர்களுக்கு அதிகளவில் தடுப்பூசி ஒதுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி விட்டாலே, தொழில் நிறுவனங்களில் கரோனா பரவல் பாதிப்பை தவிர்க்க முடியும். மொத்தமுள்ள 5 லட்சம் தொழிலாளர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் விரைவாக செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தொழில் துறையினரின் தேவையறிந்து உதவ வேண்டும்” என்றார்.
கோயமுத்தூர் கம்ப்ரஸர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் எம்.ரவீந்திரன் கூறும்போது, “கோவையில் மீண்டும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டால் பெரும் தொழில் சீரழிவு ஏற்படும். 2-ம் அலை தாக்கத்தால் 50 நாட்கள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. கடந்த ஜூன் 28-ம் தேதி தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 5-ம் தேதிதான் பேருந்துகள் இயக்கப்பட்டன. உண்மையில் கடந்த 25 நாட்களாகவே தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவையில் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பலர் தங்களது மாதாந்திர தவணைகளை கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே, சூழலை எதிர்கொள்ள கோவைக்கு அதிகமாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், தமிழக அரசு கடன்களுக்கான வட்டி ஏற்பு, தவணைகளை செலுத்தாதவர்களுக்கு அபராத தள்ளுபடி, சொத்து வரி, மின் கட்டணம் சலுகை போன்ற விஷயங்களை அறிவிக்க வேண்டும்” என்றார்.
கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, “மீண்டும் ஊரடங்கு வந்தால் தொழில் நிறுவனங்களால் தாங்க இயலாது. மாற்று நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்றார்.