2021ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் ‘மாஸ்டர்’ என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தில் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்ந்தது.

சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்ட திரைப்படமாக ‘மாஸ்டர்’ படத்தை ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் ‘மாஸ்டர்’ எனத் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த தொலைபேசி பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மற்ற படங்களை விட மிகப்பெரிய லாபத்தையும் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.