தற்காலிகமாக இயங்கி வந்த ‘அம்மா மினி கிளினிக்’குகள் மூடப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமண்யன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் கரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவம் மையம் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டன. கடந்த ஆட்சியில் ஓராண்டுக்காக இந்த கிளினிக்குகள் திறக்கப்பட்டன.

செவிலியர்கள் இல்லாமல் இயங்கி வந்த அம்மா கிளினிக்குகளில் 1,820 மருத்துவர்கள் மட்டுமே இருந்து வந்தனர். தற்போது அந்த மருத்துவர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாமல் இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு, மருத்துவர்கள் அறிவுறையுடன் சிகிச்சை பெறலாம்.

சென்னை மாநகராட்சியில் 22 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க சென்னையில் மண்டலவாரியாக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.