புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்ர வர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்ய அதிகாரம் இருக்கிறதுதானே? ஒருவரை கைது செய்வது, அவரிடமிருந்து அதிகமான தகவல்களைப் பெறுவதற்காகத்தான். எனவே, அத்தகைய கைதை தண்டனையாக பார்க்கக் கூடாது” என்றனர். அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “புலனாய்வு அமைப்புகளின் விசாரணை தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு எதிராகவோ, ஆதரவாகவோ வரலாம். ஆனால், இது அமலாக்கத் துறையின் அதிகாரம் சட்ட ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுகிறது” என்று வாதிட்டார்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, “மனுதாரர் தரப்பு வாதங்களை நாங்கள் அரசியல் சார்ந்த வாதங்களாக பார்க்கிறோம். அமலாக்கத் துறை மீது களங்கம் விளைவிக்கும் வகையிலான வாதங்களாக இவை உள்ளன. எனவே, இந்த வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மனுதாரர் தரப்பில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மட்டுமே வாதங்களை முன்வைக்க வேண்டும். சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், தவறான கைதுக்கு ஓர் அதிகாரிக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கலாம். இதனால், எந்த அதிகாரியும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரை கைது செய்ய மாட்டார்கள்” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி, நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர்.