‘வலிமை’ படத்தின் கதை வேறொரு ஹீரோவுக்காக எழுதியது என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”இதுதான் நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது. இந்தக் கதையின் வேறொரு வடிவத்தை நான் முதலில் எழுதியிருந்தேன். அப்போது அது ஒரு போலீஸ் கதையாக இருக்கவில்லை. இன்று நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் பார்க்கிறோம். இன்று இருக்கும் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். அதுபோன்ற இரண்டு பிரச்சினைகளை நான் எடுத்துக் கொண்டேன். அந்தப் பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் அந்தக் கதை.
இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு புதிய கதையாக மாற்றியிருக்கிறேன். என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவித சமரசமும் செய்யவில்லை. என்னைப் போன்ற இயக்குநர்கள் ஒரு பெரிய ஸ்டாருடன் பணியாற்றும்போது பார்வையாளர்களுக்காக எடுக்கும் படத்தில் போடும் உழைப்பில் 10 சதவீதத்தைக் கொடுத்தால் போதும். ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்களே கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள்”.
இவ்வாறு ஹெச்.வினோத் கூறியுள்ளார்.