விழுப்புரத்தில் உடைந்த தடுப்பணையை சிமென்ட் போட்டு கட்டினார்களா அல்லது களிமண் போட்டு கட்டினார்களா? என்பதே எனது சந்தேகம் என்று சட்டப்பேரவையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தேகம் எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருன், “பண்ருட்டி தொகுதியில் விழுப்புரம் எல்லையில் கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணையை மழை வெள்ளம் முழுவதும் அடித்துச் சென்று விட்டது. புனரமைப்புப் பணிகளுக்கு கடந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே அந்தப் பணிகளை தொடங்கி இரு பக்கமும் தடுப்பணைகள் பலப்படுத்தமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அந்த அணையை சிமென்ட் போட்டு கட்டினார்களா, களிமண் போட்டு கட்டினார்களா அல்லது இரண்டுமே போடாமல் கட்டினார்களா என்பது எனக்கு சந்தேகம்? அந்த அளவுக்கு தரமற்ற அணையை கட்டி உள்ளார்கள். இது குறித்து கட்டியவர் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. அதை மீண்டும் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வழக்கு உள்ளது. திட்டத்தையும் தயார் செய்து வருகிறோம்” என்றார்.