சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் தீவிரமாகி இருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும், சுவாசப் பிரச்சனை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனையின் ஒரே அறையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் பேசும்போது, “சினாவின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பரவலின் தீவிரம் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. கரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடையக் கூடியவை. எனினும், இதனை சீனா சிறப்பாக கையாளும் என்று நம்புகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் சீனா வலுவாக இருக்க வேண்டும் என்பது சீனாவுக்கு மட்டும் நல்லதல்ல, உலக நாடுகளுக்கும் நல்லது” என்றார்.
சீனாவில் உள்ள மயானங்களில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இது பற்றிய தகவல்களை சீன அரசு கடந்த 2 வாரங்களாக வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கடந்த புதன்கிழமை மட்டும் கரோனாவால் உயிரிழந்த 30 பேரின் சடலங்கள் வந்ததாக பெய்ஜிங் மயான ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதேபோல் பெய்ஜிங் நகரில் உள்ள மற்ற மயானங்களிலும் இறந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வருவதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
டோங்ஜியோ என்ற இடத்தில் உள்ள மயானத்தில் கடந்த புதன்கிழமை 150 உடல்கள் வந்துள்ளன. இவற்றில் 40 கரோனா பாதிப்பு உடல்கள் என அங்குள்ள ஊழியர் ஒருவர் தெரிவித்தார். கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு எரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் கரோனா உயிரிழப்புகளை சீன பதிவு செய்யவில்லை. பெய்ஜிங் நகரில் ஒரே நாளில் ஆயித்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், கரோனா உயிரிழப்பு ஒன்றுமில்லை என சீன அரசு கடந்த நவம்பர் 23-ம் தேதி தெரிவித்தது.
கரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளதால், அறிகுறியற்ற கரோனா பாதிப்பு விவரங்களை தெரிவிப்பதை சீன அரசு கடந்த வாரம் நிறுத்தியது. கரோனா பாதித்து இறந்தவர்களை, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எனவும் பலரை வேறு காரணங்களால் இறந்ததாகவும் மருத்துவமனைகள் வகைப்படுத்துவதாக பெய்ஜிங் மயான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா உயிரிழப்பு அதிகரிப்புகுறித்து சீன சுகாதார ஆணையத்திடம் கேட்டபோது, எந்த பதிலும்அளிக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் சீனாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,235 என மட்டுமே சீன அரசு கூறியுள்ளது. கரோனா உயிரிழப்பு விவரங்களை சீனா மூடி மறைப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.